#BREAKING: செப்டம்பர் 11ம் தேதி இனி மகாகவி நாள் – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Chief Minister MK Stalin has announced that September 11, Bharathiyar Memorial Day, will be observed as Mahakavi Day

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் 14 முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.

மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் பாரதி பற்றி ஆய்வு செய்த எழுத்தாளர்கள், குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, விருது, பாராட்டு சான்றிதழ் அரசால் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாரதியார் உருவ சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்கள் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். உலக தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் திரையில் பாரதி என்ற தலைப்பில் இசை கச்சேரி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் செய்தித்துறை சார்பில் ஓராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க நிதிஉதவி வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.