3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
அஜித்தின் உடலில் 6 பெரிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன எனவும், மொத்தமாக உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி, காவலர்களின் கொடூரமான தாக்குதலை உறுதிப்படுத்தும் திடுக்கிடும் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
அறிக்கையின்படி, அஜித்குமாரின் உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 6 பெரிய காயங்கள் உள்ளன. இடது கையில் மூன்று இடங்களில் சிகரெட் சூடு வைத்த காயங்கள், மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு, மண்டை ஓட்டின் இரு பக்கங்கள் மற்றும் நடுப்பகுதியில் கட்டையால் அடிக்கப்பட்ட கடுமையான காயங்கள் காணப்பட்டன. மேலும், தலையில் அடிபட்டதால் வலிப்பு ஏற்பட்டு, நாக்கைக் கடித்த நிலையும், கண்கள் சிவந்து வீங்கிய நிலையும், காதுகளில் ரத்தக்கசிவும் இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.அஜித்குமாரின் இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவும், கல்லீரலில் ரத்தக்கசிவும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த காயங்கள், அவர் மீது நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதலைக் காட்டுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரேத பரிசோதனை அறிக்கை, காவலர்களின் மிரட்டல் மற்றும் வன்முறையை உறுதிப்படுத்துவதாக அமைந்து, இந்த சம்பவத்திற்கு நீதி கோரும் குரல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.இந்த அறிக்கையை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவ, ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பிரேத பரிசோதனை அறிக்கை, காவல்துறையின் செயல்பாடு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது, மேலும் இந்த வழக்கில் முழுமையான நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.