அமைச்சராக யார் இருக்க வேண்டும், வேண்டாம் என்பதை ஆளுநர் முடிவு செய்ய முடியாது.! ஆளுநருக்கு முதல்வர் கடும் கண்டனம்.!

அமைச்சராக யார் இருக்க வேண்டும், வேண்டாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு இருந்தார். சிறிது நேரங்களில் அதை நிறுத்தி வைப்பதாக கூறி முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் ரவி எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த கடிதம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான கண்டனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்து உள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை என்பது அவரது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது . ஆளுநரின் அனைத்து சட்டவித விரோத உத்தரவுகளுக்கும் மாநில அரசு பணிந்து போக வேண்டும் என்று சட்டத்திட்டம் இல்லை.
ஒரு சார்பு தன்மையுடன் செயல்படுவது தான் உங்கள் (ஆளுநர் ரவி) நோக்கம் என்பது தற்போது தெளிவாக தெரிகிறது. ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. எப்போதும் தமிழ் கலாச்சாரத்தின் படி தங்களை மரியாதையாக நடத்தி வந்துள்ளோம். ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதால் அரசியல் சாசன சட்டத்தை மீறிய உங்கள் செயலுக்கு அடிபணிவோம் என்று அர்த்தம் இல்லை.
அமைச்சரவையில் இருக்கும் அமைச்ரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், பிரதமருக்கு மட்டுமே உண்டு. அமைச்சரவையில் யார் இருப்பது யார் இருக்கக் கூடாது என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது.அமைச்சரவை குறித்து தான் நான் முடிவுசெய்ய வேண்டும். என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதிய கடிதத்தில் மிகவும் காட்டமாக தனது பதிலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.