திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!
திமுக ஆட்சியில் சுதந்திரமாக சினிமா எடுக்க முடியவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற 16-ம் ஆண்டு தமிழின குடிகள் எழுச்சி நாள் நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசினார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுகவின் அராஜகங்களுக்கு எல்லாம் மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள். திமுக ஆட்சியில் யாராலும் சுதந்திரமாக படம் எடுக்க முடியாத அவல நிலை உள்ளது. அப்படியே படம் எடுத்தாலும் அதை தங்கள் நிறுவனத்திற்கு தான் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என அதிகாரத்தை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை மிரட்டுகிறார்கள்.
2026ல் எங்கள் ஆட்சி அமைந்தவுடன் தயாரிப்பாளர்கள் சுதந்திரமாக படம் எடுக்கலாம். அம்மா ஆட்சியில் ரூ.45,000 கோடி மின்சாரத்துறையில் கடன் இருந்த நிலையில், மேலும் 40,000 கோடி கடன் வாங்கி அனைத்து திட்டங்களையும் செய்தோம். தமிழகத்தின் மின் வடத்தில் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அதற்கு வாடகை வாங்கி கொள்வோம். இதுபோன்ற திட்டங்களால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினோம்.
திமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் 1 லட்சத்து 77 ஆயிரம் கோடி கடன் உள்ளது. மற்ற கடன்கள் 10 லட்சம் கோடியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக 12 லட்சம் கோடி கடன் மக்கள் தலையில் உள்ளது. ஜல்லி, எம் சாண்ட் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.1300 உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருபுறம் திமுகவினரே ஆட்களை செட் செய்து விலையை ஏற்ற வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க சொல்லி, மறுபுறம் அமைச்சரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி விலையேற்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள்
திமுக ஆட்சியில் தமிழகத்தின் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் மூலம் வரும் வருமானம் நேரடியாக அரசாங்கத்திற்கு செல்லாமல் வேறு யாருக்கோ செல்வதால் மக்களுக்கு தேவையான திட்டங்களை திமுக அரசால் செய்ய முடியவில்லை. இதுகுறித்தும் அமலாக்கத்துறை சோதனை விரைவில் நடைபெறலாம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது, பட்டப்பகலிலேயே கொலைகள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறையை செயல்படவிடாமல் திமுகவினரே சட்டத்தை கையில் எடுத்து கொள்கிறார்கள். திமுகவினரின் தலையீடு இல்லாமல் தமிழகத்தில் காவல்துறையினரை நியமிக்க முடியாத அவல நிலை உள்ளது.
திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பெரிய அளவில் முறைகேடு. கலால் வரி மூலம் தமிழகத்துக்கு 40 50 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கிடைக்கும், அதை மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் தற்போதைய ஆட்சியில் 100% கலால் வரி வசூலிக்கப்படுகிறதா என தெரியவில்லை. டாஸ்மாக்கில் 40% மதுபானங்கள் கலால் வரி கட்டாமலேயே விற்கப்படுவதாக தகவல் கிடைக்கிறது. அமலாக்கத்துறை சோதனை நடைபெற இதுவும் காரணமாக இருக்கலாம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தமிழக மக்கள் நலனுக்காக பாடுபடுகின்ற ஒரு நல்ல ஆட்சி அமையும். மே 18-ஐ தமிழ் குடிகளின் எழுச்சி நாளாக அனுசரிக்கிறோம். அதை கருத்தில் கொண்டு பல்வேறு இனமாகவும், சாதியாகவும், குடிகளாகவும் பிரிந்து கிடக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழின வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடி, நல்லாட்சியினை அமைக்க பாடுபட வேண்டும்” எனவும் சசிகலா தெரிவித்தார்.