பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பேச்சுவார்த்தை இந்த கூட்டத்தில் நடைபெறவிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே தயாராக இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதனை பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அதே சமயம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், அரசு வெளியிடும் வானிலை எச்சரிக்கைகளையும், முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் மக்கள் உதவி பெறுவதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.