நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.
வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
யாரும் பீதியடைய வேண்டாம்:
இதற்கு விவசாய சங்கங்கள் மட்டுமின்றி பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நிலக்கரி சுரங்கங்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியிருந்தார். மேலும், புதிய நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது என்றும் இது தொடர்பாக நாளை பேரவையில் பேச உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் கடிதம்:
இந்த நிலையில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை.
டெல்டா பகுதிகளை விலகிடுங்க:
முக்கியமான இந்த விவகாரத்தில் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது, இதில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தேவையற்ற போராட்டங்களையும் குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிலக்கரி அமைச்சகம் செயல்படுவது துரதிர்ஷ்டமானது என தெரிவித்துள்ளார்.