சென்னை : தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருப்பது, அவர்களை சென்னைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவு, “அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது” என்ற வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:“நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இந்தப் பதிவு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
