டெல்டா மாவட்டங்கள் அழிய கூடிய சூழல்.. கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி திட்டம் – இபிஎஸ் பரபரப்பு பேட்டி!

சட்டமன்றத்தில் பேசினால் போதாது, நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக இபிஎஸ் பேட்டி.

சட்டமன்றத்தில் பேசினால் போதாது, நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக இபிஎஸ் பேட்டி.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

கொந்தளிப்பு:

இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினர். இந்த நிலையில், சட்டப்பேரவை வெளியே செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழிய கூடிய சூழல்:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் தொழில்களை அமைக்க முடியாது. டெல்டா மாவட்டங்கள் அழிய கூடிய சூழல் நிலவுகிறது. 3 இடங்களில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் திட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு இதில் முன்கூட்டியே கவனம் செலுத்த தவறிவிட்டது.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புங்க:

திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீது தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் தான் தீர்வு கிடைக்கும். நிலக்கரி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு என தெரிவித்தார்.

இபிஎஸ் கேள்வி:

நானும் டெல்டாகாரன் தான் என்கிறார் முதலமைச்சர், இதே டெல்டாகாரன் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது. திமுக அரசு கும்பகர்ணன் போல் தூங்கக்கூடாது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு மூச்சோடு செயல்பட வேண்டும். டெல்டாவை பாதுகாத்தது அதிமுக அரசு, அதை திமுக அரசு தொடர வேண்டும். திமுகவின் 38 எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும் இடதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.