இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியை எழுப்பியுள்ளார்.

edappadi palanisamy ragupathy minister

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் தான் குற்றவாளி என கடந்த மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனைத்தொடர்ந்து இன்று அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்த தகவலும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையுடன், ரூ 90,000 அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. 

இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்ததோடு யார் அந்த சார் என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியதாவது “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை அதிமுக சாத்தியப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?

SIRஐ_காப்பாற்றியது_யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இவருடைய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியதாவது ” பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக உண்மையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார்  முதலமைச்சர். அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன்தான் என நீதிமன்றம் உறுதி செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த அற்பபுத்தி பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பச்சைப்பொய் பழனிசாமி

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி” எனவும் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்