மின்கட்டணம் அதிகமா வந்ததா?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன விளக்கம்!

9.50 லட்சம் பேருக்கு 2-3 மடங்கு கட்டணம் அதிகமாக வந்துள்ளது எனவும் 3.70 லட்சம் புகார்கள் எல்லாம் வரவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழகத்தில் மின்கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து விரிவான விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

கட்டண உயர்வு குறித்த உண்மையான புள்ளிவிவரங்கள்: கடந்த ஆண்டின் இதே கோடைக்காலக் காலகட்டத்தில் சுமார் 11.50 லட்சம் பேருக்கு வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் மின் கட்டணம் வந்திருந்தது. ஆனால், நடப்பாண்டில் அது குறைந்து 9.40 முதல் 9.50 லட்சம் பேருக்கு மட்டுமே இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் வந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாகக் கட்டணம் வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் வரை குறைந்துள்ளது.

புகார்கள் அல்ல: கோடைக்காலம் என்பதால் வீடுகளில் ஏசி (AC) போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு வழக்கத்தை விடக் கூடுதலாக இருக்கும். இதனால் மின் கட்டணம் இயற்கையாகவே அதிகரிக்கக்கூடும். மின்கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் வீடுகளில் மின்வாரியம் சார்பில் வழக்கமான கள ஆய்வுகள் (Routine Checkup) மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவே தவிர, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்படுவது போல 3.70 லட்சம் புகார்கள் எதுவும் பெறப்படவில்லை.

இந்த வழக்கமான ஆய்வின் அடிப்படையில் மறு மதிப்பீடு (Re-assessment) செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான முழுமையான அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.