டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, இந்தச் சோதனையில், டெண்டர் செயல்முறைகள், மதுபான விலை நிர்ணயம், பார் உரிமங்கள், மற்றும் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
மேலும், ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
ஆனால், கடந்த முறை இந்த வழக்கை விசாரித்தபோது, அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சோதனை தொடர்பாக அமலாக்கதுறை 47 பக்க பதில் மனு தாக்கல் செய்தது. அதில், டாஸ்மாக் வழக்கில் சட்டப்பூர்வ விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மனு உள்ளது. ஆகவே அதை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். எங்கள் சோதனையின்போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
நாங்கள் செய்த சோதனைக்கான வாரண்ட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு தரப்பில், அமலாக்கத்துறையின் பதில் மனுவிற்கு பதில் அளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும். அமலாக்கத்துறையின் பதில் மனுவிற்கு பதில் அளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும். 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர் என்று தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் குறுக்கிட்டு, தமிழக அரசு சோதனை நடத்தியது இல்லையா? அரசு மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து, அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்.9-க்கு ஒத்திவைத்தனர்.