“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!
நயினார் நாகேந்திரன் அன்போடு கேட்கும் கோரிக்கைகளை நாங்களும் அன்போடு பரிசீலிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இப்போது, ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவரும், திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாட்டின் மையப்பகுதியில் திருச்சி அமைந்துள்ளது. அதே சமயம் சென்னையில் போக்குவரத்து நெரிசல், நீர் பற்றாக்குறை, மற்றும் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கு தீர்வு வேண்டும் என்றால் தென் மாவட்ட மக்களுக்கு தலைமைச் செயலகம் செல்வதற்கு திருச்சி சிறந்த இடமாக இருக்கும் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை மாற்றவேண்டும் ” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நயினார் நாகேந்திரன் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் நாங்கள் அன்போடு பரிசீலிப்போம். அவர் இதுவரை வைக்கும் கோரிக்கைகளுக்கு நன்றி நன்றி என அன்போடு தெரிவித்து தான் பேசி வருகிறார். எனவே நானும் அன்போடு சொல்கிறேன். அன்போடு உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்.” என்று முதல்வர் கூறினார்.
மேலும், முன்னதாக, 1980களில் எம்ஜிஆர் மற்றும் 2020ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திருச்சியை தலைநகராக்கும் பேச்சு எழுந்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது நயினாரின் கோரிக்கை மீண்டும் இந்த விஷயத்தை பற்றி பேசி தன்னுடைய கோரிக்கையை சட்டப்பேரவையில் வைத்துள்ளதும் இப்போது திமுக அரசு இதை பரிசீலிக்கும் என்று கூறியிருப்பது, எதிர்காலத்தில் இது தொடர்பான ஆய்வுகள் அல்லது மக்கள் கருத்து கேட்பு நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்புகளையும் தூண்டி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025