விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ள, திமுக துணை நிற்கும்; அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் ஸ்டாலின்.!

அமலாக்கத்துறையின் விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ளுமாறு தொலைபேசியில் பொன்முடிக்கு முதல்வர் அறிவுரை.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் திமுக எம்பி கெளதம சிகாமணி ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வந்தனர். இந்த சோதனையானது சுமார் 9 நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இருவரிடமும் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் பொன்முடியிடம், தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் பேசியுள்ளார்.

அதில் விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதல்வர், அமலாக்கத்துறையின் விசாரணைகளை துணிச்சலுடனும், சட்டபூர்வமாகவும் எதிர்கொள்ளுமாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர்க்க நமது திமுக துணை நிற்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின், பொன்முடியிடம் தெரிவித்தார்.