அன்புமணி பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீங்க…கடுப்பான பாமக நிறுவனர் ராமதாஸ்!
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை 3, 2025) செய்தியாளர்களைச் சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். “நிறுவனரும் தலைவருமான எனக்கு மட்டுமே நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அன்புமணி குறித்த கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்க்கவும், இது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது,” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியதை வரவேற்றார். இந்த திட்டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், இதுபோன்ற விபத்துகளை தடுக்க பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதன்பிறகு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் விவகாரத்திலும் ராமதாஸ் கருத்து தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். விருதுநகர் எஸ்.பி. கண்ணன், இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தொழிலாளர்களை எச்சரித்தது கண்டனத்திற்குரியது என்று அவர் குற்றம்சாட்டினார்.
இறுதியாக, பாமகவின் கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை மறுத்த ராமதாஸ், திமுக மற்றும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுவது உண்மையில்லை என்றார். மேலும், வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பெண்களும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார்