ஆதார் அட்டையை பயன்படுத்தி இணையதளம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதில் மக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் முன் பக்கமும், பின் பக்கமும் மட்டும் பிங்க் நிறம் அடிக்க காரணத்திற்கு விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில் இந்த பேருந்து ஆண், பெண் இருவரும் பயணிக்கும் பேருந்து எனவும் பேருந்து முழுவதும் பிங்க் நிறம் அடித்தால் அது பெண்கள் மட்டும் பயணிக்கும் பேருந்தாகிவிடும் என்று கூறினார்.
மேலும், பேருந்தின் இரண்டு பக்கங்களிலும் விளம்பரங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விளம்பரங்கள் மூலம் கூடுதல் வருவாய் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விளம்பரங்களுக்கான டெண்டர்களும் விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.