துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!
துரை வைகோ விலகல் குறித்து நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நல்ல முடிவை தலைவர் வைகோ அறிவிப்பார் என்று மதிமுக பொருளாளர் கூறியுள்ளார்.

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, கட்சியில் இருந்து துரை வைகோ விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவருடைய தந்தையும், கட்சியின் நிறுவனருமான வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அக்கட்சி பொருளாளர் செந்திலதிபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”எதுவாக இருந்தாலும் நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் வைகோ அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார். துரை வைகோ விலகல் விவகாரத்தில் சமாதானம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” என்று கூறியுள்ளார்.