அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்க கூடாது என மனுவில் கோரிக்கை.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வராமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்க கூடாது எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என்றும் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்திருந்தார். கர்நாடகா சட்டப்பேரவையில் தேர்தலில் புலிகேசி நகரில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் முடிவதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, தீர்மானங்களை இன்றே அங்கீகரித்து முடிவு அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.