தேர்தல் நேர வர்ணஜாலம்.. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு வரவேற்பு.. பாஜக அரசு மீது முதலமைச்சர் விமர்சனம்!

புதிய நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்று சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

Tamilnadu CM MK Stalin

புதிய நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்று சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்து வரும் நிலையில், ஒருபக்கமும் பாஜக அரசு மீது விமர்சனமும் வைத்து வருகின்றனர். இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற உள்ளது.

2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை உள்ளிட்ட பணிகள் முடிந்து, 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் என்பதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திருத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை திமுக வரவேற்பதாக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் திமுக, மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது, இன்றும் வரவேற்கிறது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 100-ல் 1 விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து, இந்த சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தமிழ்நாட்டை வஞ்சிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு இப்போதே தர வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை பாஜக அரசு பரிசீலிக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள்.  சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு – அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை.

இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி – ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள். பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டு வரவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?. சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள் ஆகும். சாதி வேறுபாடுகள் அற்ற சமத்துவத்தை உருவாக்கவே சமூகநீதிக் கோட்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் நடத்தாத ஒரே நாடு இந்தியா. எப்போது நடைபெறும் என்ற உத்தரவாதத்தையும் இதுவரை பா.ஜ.க. அரசு தரவில்லை. எப்போது நடைபெறும் என்று தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க.வால் அரங்கேற்றப்படுகிறது.

தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் மோடியை வலியுறுத்திவதாக தெரிவித்துள்ளார்.