வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் இனி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
1.4.2023 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 05.01.2023-ஆம் தேதியிலிருந்து பெறப்படுகின்றன. விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிசீலிக்கப்படும்.https://elections.tn.gov.in/என்ற வலைத்தளத்தில் வாக்காளர்கள் தங்களது பட்டியலை காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” என்ற செயலி தரவிறக்கம் செய்து அதன் மூலமாகவும், இணைய மூலமாகhttps://voters.eci.gov.in/என்ற வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் மென் நகலினை பெற ரூ.100 வீதம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளதாகவும், ஆண் வாக்காளர்கள் 3,02,18,904, பெண் வாக்காளர்கள் 3,11,09,813, பாலின வாக்காளர்கள் 7,979 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக சட்டமன்ற தொகுதி துறைமுகத்தில் 1,69,292 பேர் உள்ளனர்.
unknown node