காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – ஈபிஎஸ் கடும் கண்டனம்.!

திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சுக்கு, இவரே குண்டு வைப்பாராம், இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம் என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trichy Siva - Edappadi

சென்னை : திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சமீபத்தில் சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருச்சி சிவா பேசுகையில், “காமராஜரருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக திமுக ஆட்சிக் காலத்தில், அவர் தங்குகிற எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி என்னிடம் சொன்னார். கருணாநிதியின் கையைப் பிடித்து, நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” எனப் பேசியுள்ளார்.

இந்தக் கருத்துகள் காமராஜரை இழிவுபடுத்துவதாகவும், வரலாற்றைத் திரித்ததாகவும் கருதப்பட்டு, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களால் கடும் கண்டனத்துக்கு உள்ளாகின. இதற்கு பதிலளிக்கும் விதமாக, திருச்சி சிவா ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில், காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தான் பேசவில்லை என்றும், காமராஜர் மீது தனக்கு மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் உள்ளதாகவும் கூறினார். மேலும், தனது பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவர் குறித்த சர்ச்சையை ஆரம்பித்தது திருச்சி சிவா தானே? அவர் பற்றி அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுகவினர் தானே?

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை யாரும் மறக்கவில்லை. அவர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?

இவரே குண்டு வைப்பாராம், இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்; நடிக்காதீங்க முதலமைச்சரே, அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது. உங்களுடைய நோக்கம் என்னவென்று, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்