பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்? – பாஜக தலைவர்கள் அதிர்ச்சி!

இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ஆதரவு தர பாஜக மறுத்து வரும் நிலையில், எடப்பாடி தரப்பு அதிரடி பதிலடி.

இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ஆதரவு தர பாஜக மறுத்து வரும் நிலையில், எடப்பாடி தரப்பு அதிரடி பதிலடி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.  ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்த உடன் வேட்பாளரை அறிவித்தது பழனிசாமி அணி.

இடைத்தேர்தலில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னரே பழனிசாமி அணி வேட்பாளரை அறிவித்ததால், பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகியதா என கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக அணிகள் எங்களது முடிவுக்காக காத்திருப்பதில் தவறு இல்லை என பாஜக கூறியிருந்தது. ஆனால், பாஜக நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல் அதிமுக வேட்பாளரை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என பாஜக மாநில தலைவரை அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி சார்பில் திறக்கப்பட்ட்ட பணிமனையில் பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் இடப்பெறவில்லை.

பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படம் மற்றும் கொடியும் இடம்பெறவில்லை. பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என அறிவித்த ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை.

அதிமுக பேனரில் ஜிகே வாசன், ஜெகன்மூர்த்தி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ஆதரவு தர பாஜக மறுத்து வரும் நிலையில், எடப்பாடி தரப்பு அதிரடி பதிலடி கொடுத்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டியதால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரதமர் மோடி படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்பாட்டால் இடைத்தேர்தலில் எடப்பாடி அணி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.