சென்னை : சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையான கள ஆய்வு செய்ய 38 பொறுப்பாளர்களைக் கொண்ட குழுவை அமைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.இன்று அந்தக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்” என்று கூறினார்.
மேலும் அவர், “தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது” என்று வலியுறுத்தினார்.
ஸ்டாலின் தொடர்ந்து கூறியதாவது: “நீங்கள் இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்கக் கூடாது. கழகத்தினர் மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதை உங்கள் அறிக்கையில் துல்லியமாகப் பதிவு செய்யுங்கள்.”“நிர்வாகிகளின் உண்மையான உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள்.
இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்” என்றும் அவர் சொன்னார்.மேலும், “நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். அதனால் ஸ்கேன் ரிப்போர்ட் போல துல்லியமாக இது இருக்க வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஜூன் 5ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை அறிந்து, கழகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் கட்சியில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
