மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்.
தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் கடந்த மாதம் 9ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அம்மீனவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இப்பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில், இக்கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துமென்று முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தினை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
unknown node