வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
கங்கைகொண்ட சோழபுரத்தில் சாலைவலம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா, மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளையும், அவரது தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் வகையில் ஜூலை 23 முதல் 27 வரை நடைபெற்றது.
இதற்காக, பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்திறங்கினார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் சாலைவலம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காரின் படியில் நின்றபடி மக்களை பார்த்து கையசைத்து வருகிறார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருக்கும் மக்கள், அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் வழிநெடுக தூவப்பட்ட மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுமார் 3 கி.மீ. ரோடு ஷோ மேற்கொண்ட பின் பிரதமர் மோடி, கோயிலில் வாரணாசியிலிருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சில நிமிடங்கள் தியானம் மேற்கொள்கிறார். முன்னதாக, திருச்சியில் ஹோட்டலிலிருந்து விமான நிலையம் செல்லும் வழியிலும் மற்றொரு ரோடு ஷோ நடைபெற்றது.