தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு டிடிவி தினகரன் விமர்சனம்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்து பெரும் சர்சையாகியுள்ளது.
தமிழக ஆளுநர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ‘சர்ச்சை நாயகனாக’ உருவெடுத்து வருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி, தமிழ்நாடு விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி ‘சர்ச்சை நாயகனாக’ உருவெடுத்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருடைய பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகல்ல. மேலும், ஆளுநர் பேச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தாலே போதும், எதுவும் பேசமாட்டார். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள், முடிந்து அவரே சென்றுவிடுவார், அதுக்கு அப்புறம் அவரை பற்றி யாரும் பேசமாட்டார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.