சென்னை :2026-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 20) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது. இதற்கென காலை 9.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தடைந்தார். சபாநாயகர் எம். அப்பாவு அவரை பாரம்பரிய முறையில் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கூடியிருந்த நிலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.பாரம்பரிய முறைப்படி சட்டப்பேரவை கூட்டத் தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கும் நிகழ்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் எம். அப்பாவு தெளிவுபடுத்தினார்.தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமலேயே காலை 9.37 மணியளவில் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். இந்த வெளிநடப்பு பேரவையில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியது கடந்த காலங்களில் நிகழ்ந்த சர்ச்சைகளை மீண்டும் நினைவூட்டியது.ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற ஆளுநரின் வலியுறுத்தல் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விவாதங்கள் தொடங்குவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியதால், அவரது உரை வாசிக்கப்படாமல் தொடர்ந்து நடவடிக்கைகள் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஆளுநர் – தமிழக அரசு இடையேயான முரண்பாட்டை மீண்டும் வெளிப்படையாகக் காட்டியுள்ளது.
