ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!
ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி – பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை வீட்டில் வசித்து வந்த நிலையில், மர்மமான முறையில் அவர்கள் உயிரிழந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனபோலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமியிடம் இரட்டை கொலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, “அதுபற்றி போலீசார் தரப்பு விரிவாக பேசுவார்கள். நேற்று இரவு தான் அச்சம்பவம் தெரிய வந்துள்ளது. அதுபற்றி முழு விவரம் தெரிந்த பிறகு நான் பதில் கூறுகிறேன்.” என்க் கூறினார்.
பிறகு செய்தியாளர் ஒருவர், ” குறிப்பாக இங்கு மட்டுமல்ல திருப்பூர்,கோவை, ஈரோடு பகுதிகளில் வயதானவர்களை குறிவைத்து தொடர்ந்து இதுபோல தாக்கி கொலை செய்து நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என இபிஎஸ் குற்றசாட்டு வைத்து வருகிறார்.” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், “இபிஎஸ் குற்றசாட்டு வைப்பது இயற்கை. அப்படி தான் சொல்லி கொண்டு இருக்கிறார். அரசாங்கம் மிக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி தகவல் தெரிந்த உடன் அரசு அதற்கான எல்லா நடவடிக்கையும் எடுத்துள்ளது. சில வழக்குகளில் 8 மணிநேரத்தில் குற்றவாளிகள் யார் என கண்டுபிடித்து கொடுத்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து தெரிந்த உடன் காவலத்துறை மிக வேகமாக செயல்பட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று இரவு தான் இந்த விஷயம் தெரிந்துள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறது. இப்பொது அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து கொண்டு போயிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து தான் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.