“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!
ஜிஎஸ்டி வரி வருவதற்கு முன்னரே VAT வரி மற்றும் மாநில வரிகள் இருந்தன. தற்போது அது குறைந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஜிஎஸ்டி பற்றி விளக்கத்தையும் அவர் அளித்தார்.
ஜிஎஸ்டி பற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ” ஜிஎஸ்டி என்பது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மட்டும் எடுக்கும் முடிவு அல்ல. அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்டுகிறது.
ஜிஎஸ்டி அறிமுகமான 2017க்கு முன்னர் இருந்தே VAT வரி மற்றும் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது. அதற்கு 17 வகை வரி, 8,9 கூடுதல் வரி சேர்த்து தான் ஜிஎஸ்டி வரி தற்போது விதித்து வருகிறோம்.
நடுத்தர மக்கள் தினசரி உபயோகம் செய்யும் பொருட்கள் மீது தற்போது வரி விதிக்கப்பட்டது என கூறுவது தவறு. முன்னர் இருந்தே இந்த வரி இருந்துள்ளது. தற்போது அந்த வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவை குறைந்துள்ளது. இப்போது அதனையும் குறைக்க தான் நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம். அதற்கு தான் அனைத்து மாநில அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.
முன்னர் பொருள் வாங்கும் போது அந்த வரியை யாரும் காட்டவில்லை. இப்போது சென்ட்ரல் ஜிஎஸ்டி ஸ்டேட் ஜிஎஸ்டி என காட்டியுள்ளோம். இப்போது நேர்மையாக நாங்கள் பில்லோடு வரியை குறிப்பிட்டு போடுகிறோம். அந்த வட்டியை பில்லில் தனியே காட்டியவுடன் இப்போது தான் வரி போடுவது போல தெரிகிறது. இந்த வரிகள் அனைத்து மாநில அரசுகள் ஒப்புதலோடு தான் வரி விதிக்கப்டுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.