அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?
2026-ல் NDA கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறியதும், கூட்டணி தானே தவிர கூட்டணி அரசு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த பிறகு தனிப்பெரும்பான்மையுடனே ஆட்சியமைக்க விரும்பும். கூட்டணி அரசாக அமைந்தாலும் கூட அமைச்சரவையில் பிரதான கட்சி கூட்டணி கட்சிக்கு இடம் அளித்தது இல்லை.
இப்படியான சூழலில், மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 11-ல் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து விட்டு பேசிய கருத்துக்களும், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது என்றும், தேசிய அளவில் NDA கூட்டணியில் அதிமுக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார். மேலும், 2026-ல் கூட்டணி ஆட்சியா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 2026-ல் NDA கூட்டணி ஆட்சி தான். நாங்கள் இணைந்து ஆட்சியமைக்க போகிறோம் என குறிப்பிட்டார்.
மத்தியில் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு நான்…
இதனால், 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அந்த அரசு அதிகார பங்கீட்டில் அதிமுக உடன் பாஜக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு நேற்று செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அதில், கூட்டணி அரசு என்று அமித்ஷா சொல்லவில்லை, அதிமுக- பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா சொல்கிறார். மத்திய அரசுக்கு பிரதமர் மோடி போல, தமிழகத்திற்கு எனது பெயரை அமித்ஷா குறிப்பிட்டார். எனவே, இதை வேறுமாதிரியாக பார்க்க வேண்டாம் என விளக்கம் அளித்தார்.
தேர்தலில் அதிமுக – பாஜக அடங்கிய NDA கூட்டணி வெற்றி பெற்றாலும், அரசு, அமைச்சரவை பங்கீட்டில் இடம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மறைமுகமாக கூறியுள்ளார் என்றே கூறப்படுகிறது. இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் பதில் அளித்துள்ளார்.
அமித்ஷா தான் பேச வேண்டும்
நேற்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், ” கூட்டணி அரசு குறித்த விவகாரத்தை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. மத்திய அமைச்சர் அமித்ஷா தான் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார். அது பற்றி அமித்ஷா தான் பேச வேண்டும்.” என விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டணி அறிவித்த சில தினங்களிலேயே வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அளவுக்கு இரு தலைவர்கள் இடையே கருத்து மாறுதல்கள் பேசுபொருளாகி உள்ள நிலை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.