ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்திற்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்!

The Sri Raghavendra Education Association has been given an opportunity to vacate the building till April 30, 2021.

கட்டடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் சங்கத்திற்கும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையின் கிண்டி பகுதியில்ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்திவருகிறார் லதா ரஜினிகாந்த். இவர் இப்பள்ளியின் செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில், வெங்கடேஷ்வரலு மற்றும் பூர்ணசந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், 2013ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிட கோரி இட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி திடீரென பள்ளியின் கேட் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு பின்பும் வாடகைப் பாங்கி பிரச்னை நீடித்த நிலையில், 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், சமீபகாலமாக கொரோனா தொற்று காரணமாக, உறுதியளித்த படி  காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீடித்து தருமாறு சங்கத்தின் சார்பில் செயலாளர் லதா ரஜினிகாந்த்  நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கு டிசம்பர்-14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, லதா ரஜினிகாந்த் தரப்பில், இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ் தொகை உட்பட ரூ.8 லட்சம் ரூபாயை முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவின்படி, கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் சங்கத்திற்கும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அவ்வாறு செய்யாவிட்டால் கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த்தை நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும், இந்தப் பள்ளி தற்போதைய முகவரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.