"நீட் தொடர்ந்தால்..நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம்” -நீதிபதி ஏ.கே.ராஜன் குழு எச்சரிக்கை..!

"If the NEET continues...Tamil Nadu will return to the pre-independence state" -Judge AK Rajan panel warned ..!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இதனையடுத்து,பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஏ.கே.ராஜன் குழு,நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு,ஆளுநருக்குஅனுப்பட்டது.

இந்நிலையில்,நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்கையை தமிழக அரசு நேற்று இணையதளத்தில்https://drive.google.com/file/d/18WvEoNP5pYXE0xLoPQ9logPaA34Hg69h/viewவெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்னும் ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றால், தமிழக சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற,நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும்.

மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்புதரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

இதனால்,நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் மருத்துவ கவுன்சிலின் சட்டதிட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்ற சட்ட விதிகள்,அரசியல் சட்டக் கூறுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

2007-ல் கொண்டு வரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல,நீட் தேர்வை ரத்து செய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என நாடு முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், பாடங்கள், கற்பித்தல், தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும்.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது.மேலும், நீட் கோச்சிங் என்ற பெயரில் குறுகிய கால பயிற்சிக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும், நீண்ட கால பயிற்சிக்கு ரூ.60,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால்,நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களை பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல.ஏனெனில், முதல் முறை நீர் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.