செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்று பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. செந்தில் பாலாஜி தவறு செய்தது தெரிய வந்ததும் நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா.
முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் செந்தில் பாலாஜியை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. ஆனால், திமுக அரசு அவரை காப்பாற்ற துடிக்கிறது. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதால் அமைச்சர்கள் ஏன் பதைபதைப்பு என கேள்வி எழுப்பிய அவர், மா.சுப்பிரமணியன் அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் என்றார்.
30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவருக்கு திடீரென எப்படி நெஞ்சுவலி வரும்?, காவல்துறையை காலால் எட்டி உதைத்தபோது நெஞ்சுவலி இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விமர்சனத்தை முன்வைத்தார்.
மேலும், அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் எனவும் விமர்சித்தார். எனவே, செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி கைது பற்றி என்னவென்றே தெரியாமல் சில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர் எனவும் விமர்சித்தார்.
