“வார்த்தைகள் மீறினால்...” - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு கடும் எச்சரிக்கை!

இன்றைக்கும் கலைஞரை உயிருக்கு நிகராக நேசிப்பவர் எங்கள் தலைவர் என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : திமுக அமைச்சர் சேகர் பாபு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார்.சேகர் பாபு பேசுகையில், “பல்லுக்கு அடங்காத சொல்லும், பல்லுக்கு அடங்காத வாயும், வாய்மைக்குக் கட்டுப்படாத சொல்லும் சபையிலே என்றும் நினைத்ததில்லை. ஆனால் அது பொய்த்துத்தான் இருக்கிறது” என்று கூறினார்.

மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அந்திம காலத்தை நினைவுகூர்ந்த அவர், “கலைஞர் அவர்களுடைய அந்திம காலங்களில் அவரை எவ்வளவு மகிழ்ச்சியோடு வைத்திருந்தார்கள் என்பதை இந்த நாடு அறியும். ஐந்து முறை முதலமைச்சராகப் பணியாற்றியவர். ஐம்பது ஆண்டுகால அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். பல்வேறு மறைந்த முதலமைச்சர்களுக்கு நினைவிடங்களைக் கட்டித் தந்தவர். தமிழ்நாட்டில் உள்ள நினைவிடங்களில் பாதிக்கு மேல் கலைஞரால் கட்டித் தரப்பட்டவை” என்று சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து, “அப்படிப்பட்ட நினைவிடங்களை அமைத்த நினைவில் வாழ்பவருக்கு நினைவிடத்திற்கு கூட அனுமதி மறுத்து, மகன் என்ற ரீதியில் கட்சியின் தலைவருக்குச் சட்டப் போராட்டம் நடத்தி இடத்தை வாங்கித் தந்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்” என்று கூறினார்.

சேகர் பாபு மேலும், “கலைஞர் வாழும் வரை அவர் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். அம்மையார் அவர்கள் மறைவின் போது ஒரு வாய்ப்பு இருந்தபோதும் கூட, மக்களால் தேர்வு செய்யப்பட்டுத்தான் நான் முதல்வராக ஆவேன் என்று கலைஞர் சொன்னார். அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்தவர் எங்கள் தலைவர். நாற்காலிக்கு அடியிலே ஊர்ந்து வந்து பதவியை பூவத்தூரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட தலைவர் அல்ல எங்கள் தலைவர்” என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியை நோக்கி சேகர் பாபு கடும் எச்சரிக்கை விடுத்தார். “வார்த்தைகள் அளவு மீறினால் நாங்களும் வார்த்தைகளால் அளவு மீற தயாராக இருக்கிறோம். எந்தப் பந்தைக் கொண்டு எறிகிறீர்களோ அதே பந்து மீண்டும் உங்கள் பக்கம் திரும்பும்” என்று அவர் எச்சரித்தார்.மேலும், “எங்கள் தலைவர் தனது தலைவரை தலைவராகவும், அரசியல் குருவாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர். நீ எப்படி உன்னை முதலமைச்சராக்கியவரை மூன்று மாத காலத்தில் மறந்து, அவர் சென்னை சிறையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று பெங்களூர் சிறையில் நான் இருந்தேன் என்று உன்னை முதலமைச்சராக்கியவர் அறிக்கை விட்டவரல்ல எங்கள் தலைவர்” என்று கூறினார்.

இறுதியாக, “இன்றைக்கும் கலைஞரை உயிருக்கு நிகராக நேசிப்பவர் எங்கள் தலைவர். எந்தப் பணியைத் தொடங்கினாலும் கலைஞர் முன் நின்றுதான் தொடங்குபவர். ‘நீ உப்பிட்ட வீட்டில் கண்ணமிடுபவர்’ என்ற சொல்லுக்கு ஏற்றவாறு வாழ்பவர் எங்கள் தலைவர். உனக்கு எங்கள் தலைவரைப் பற்றியோ, இயக்கத்தைப் பற்றியோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறேன்” என்று சேகர் பாபு தெரிவித்தார்.