“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி காட்டத்துடன் பேசியுள்ளார்.

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது.
அந்த வகையில், அமைச்சர் ஆர்.எஸ் பாரதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் காட்டத்துடன் இதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ’அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.
அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள். உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா?
இன்றைக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வருமானவரித் துறை அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும். ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள். அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக!
முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை எல்லாம் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல! “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.
இந்தியாவிலேயே பாஜகவின் மதவெறி அரசியலுக்கு இடம் தராத ஒரே மண் தமிழ்நாடு. இங்கே எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் எனும் கலவர நோக்கத்தோடு, பல வித்தைகளை பாஜக காட்டினாலும் அவை படுதோல்வியையே சந்திக்கின்றன. அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கம்தான். அந்த இலட்சியப் பணியைத் தலைமையேற்று நடத்தி பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிரான சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள்” எனவும் காட்டத்துடன் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?
உங்கள் தாயை, மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா? அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா?
முருகன் மாநாடு, RSS… pic.twitter.com/DsvKq20NJx— DMK (@arivalayam) June 23, 2025