இதுதான் திராவிட மாடலா? அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செயலுக்கு சீமான் கண்டனம்!

அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இஸ்லாமிய பிரதிநிதிகளை நிற்க வைத்து பேசியதாக சீமான் குற்றச்சாட்டு.

Seeman

அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இஸ்லாமிய பிரதிநிதிகளை நிற்க வைத்து பேசியதாக சீமான் குற்றச்சாட்டு.

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செயலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம், தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த இஸ்லாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார்.

இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?, இஸ்லாமிய பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது, இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இஸ்லாமிய பிரதிநிதிகளை சம்மாக உட்கார வைக்ககூட மனமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு. மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா?, இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.