டெல்லியில் சென்று காலில் விழுவதுதான் வாடிக்கை... திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர் நிர்மல் குமார்!

திமுக - பாஜக நேரடிக் கூட்டணி வைத்துள்ளது எனவும் சொத்து வரி, தொகுதி மறுவரையறை மற்றும் கட்சி நிதி விவகாரங்கள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருக்கிறார்.

Hero Image

சென்னை : தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள், சொத்து வரி முறைகேடுகள், முந்தைய ஆட்சி நிதி மற்றும் தற்போதைய அரசியல் கூட்டணிகள் குறித்துப் பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சொத்து வரி உயர்வா?

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், எங்குமே புதிதாக வரி உயர்த்தப்படவில்லை என்றும், மாறாக ஏற்கனவே உள்ள சொத்து வரி முறைகள் மட்டுமே முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் (Re-assessment) விளக்கமளித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையின் பெரிய குடியிருப்புகள் மற்றும் மதுரையில் சொத்து வரி மதிப்பிடுவதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மதுரையில் நடந்த வரி முறைகேடு தொடர்பாக திமுக மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திமுக - பாஜக நேரடிக் கூட்டணி - நிர்மல் குமார் சாடல்

திமுக இதுவரை பாஜகவுடன் மறைமுகமாகத்தான் உறவு வைத்துள்ளது என்று நினைத்த நிலையில், தற்போது அது நேரடிக் கூட்டணியாக மாறியுள்ளது என்றார். திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆவார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுவதை திமுக தரப்பு இதுவரை மறுக்கவில்லை என்பதையும், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டதன் மூலமும் இந்த நேரடிக் கூட்டணி அம்பலமாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தங்களின் மீதான ஊழல் வழக்குகளில் இருந்தும், தாங்கள் சேர்த்த சொத்துக்களைக் குடும்பத்தினரிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவுமே திமுகவினர் டெல்லிக்குச் சென்று தஞ்சம் அடைவதாகவும், பிரச்சினை வரும்போதெல்லாம் எந்தவிதக் கூச்சமும் இன்றி டெல்லியில் சென்று காலில் விழுவதுதான் அவர்களின் வாடிக்கை என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

தொகுதி மறுவரையறை

எதிர்காலத்தில் வரவிருக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்த வாக்கெடுப்பு மற்றும் நடவடிக்கைகளின் போது திமுக அதற்கு எதிராக வாக்களிப்பார்களா இல்லையா என்பதை இதுவரை வெளிப்படையாகத் தெளிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலத்தில் முறைகேடாக வசூலிக்கப்பட்ட கட்சி நிதிகள் மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்போது அரசுக்கான வருவாயாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்து விவகாரங்களுக்கும் ஆவண அடிப்படையிலான ஆதாரங்கள் இருப்பதால், எவ்வளவு காலம் தள்ளிப்போட முயன்றாலும் சட்டத்தின் பிடியிலிருந்தும் வழக்குகளிலிருந்தும் திமுகவினரால் தப்பிக்க முடியாது என்று எச்சரித்தார்.

டெல்லியில் சென்று காலில் விழுவதுதான் வாடிக்கை... திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர் நிர்மல் குமார்!