பெரியார் என பட்டம் கொடுத்தது பெண்கள்தான்.. மகளிர் தின விழாவில் முதலமைச்சர் உரை!

பெண்களுக்கு சொத்து சம உரிமை வழங்கிய தலைவர் தான் கலைஞர் என மகளிர் தின விழாவில் முதலமைச்சர் உரை.

பெண்களுக்கு சொத்து சம உரிமை வழங்கிய தலைவர் தான் கலைஞர் என மகளிர் தின விழாவில் முதலமைச்சர் உரை.

சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், பேரன்பிற்குரிய சிங்கபெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து.

பெரியார் என பட்டம்:

மார்ச் 8 என்பது மகளிர் தினம் மட்டுமல்ல, மனிதகுலத்துக்கும், மனித உரிமைக்கும் முக்கியமான நாள். ஈ.வெ.ராவுக்கு பெரியார் என பட்டம் கொடுத்தது பெண்கள்தான்.  தமிழ்நாட்டில் சங்க காலம் முதலே பெண்கள் உயர்வாக போற்றப்பட்டு வருகின்றனர். மகளிரை வாழ்த்துவது இந்த நாட்டையே வாழ்த்துவது போன்றது.

திராவிட இயக்கம்:

மகளிர் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம் தான் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். சமூக நீதி திட்டங்களை திராவிட மாடல் அரசால் அதிக அளவில் செயல்படுத்தி வருகிறோம். உள்ளாட்சிகளில் முதன் முறையாக பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தந்தது திமுக அரசு தான்.

பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு:

சமூக நலத்துறையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என மாற்றியுள்ளோம். பெண்களை அதிகாரமிக்கவர்களாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வடமாநில பெண் ஒருவர் அடைக்கலம் தேடி வரும் அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. பெண் என்றால் ஆண்களுக்கு அடிமை என்ற சிந்தனை ஆண்கள் மனதில் இன்னமும் உள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்:

பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் ஒரு பெண் ஓதுவாரும் இடம்பெற்றுள்ளனர். திராவிட இயக்கம் தான் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கை குழந்தைகளுடன் பல பெண்கள் பங்கேற்றனர் என குறிப்பிட்டார்.

பெண்களுக்கான திட்டங்கள்:

பெண்களுக்கு சொத்து சம உரிமை வழங்கிய தலைவர் தான் கலைஞர். அரசு பணியில் பெண்களுக்கு ஒதுக்கீடு, 5ம் வகுப்பு வரை அரசு பள்ளி ஆசிரியர்களாக பெண்களை நியமித்தது திமுக ஆட்சியில் தான். பெண்களுக்குக்கான திருமண உதவி திட்டம் உள்ளிட்ட ஏரளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என பல்வேறு சிறப்புகள் குறித்து முதலமைச்சர் உரையாற்றினார்.