கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவ்வப்போது, இதுதொடர்பாக சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கோவை உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கோவை மற்றும் சென்னையில் சோதனை நிறைவு பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செல்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க், ரூ.60 லட்சம் பணம் மற்றும் 18,200 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 13வது நபரிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது அசாருதீன் தற்போது கேரளா திருச்சூர் சிறையுள்ளார்.
முகமது அசாருதீன் வேறொரு வழக்கில் கைதாகி திருச்சூரில் உள்ள விய்யூர் உயர் பாதுகாப்பு சிறையில் உள்ளார். கோவை கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் அசாருதீனை சிறையில் சந்தித்தது தெரிய வந்ததை அடுத்து, முகமது அசாருதீனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
