சென்னை : மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. தமிழக மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த முதலமைச்சர் விஜய்யின் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கான பதிலுரை இன்று பேரவையில் நடைபெற்றது. இதில் சட்டம் ஒழுங்கு, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து, திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, “நாங்க மிசாவைப் பாத்தவங்க, மிசாவைப் பாத்தவங்கனு சொல்றாங்க. அந்த மிசா வரலாறு எல்லாருக்குமே நல்லா தெரியும். மக்களைவிடவா நாங்க அவங்கள விமர்சிக்கப் போறோம்?” என்று கூறினார். மேலும், திமுகவை விமர்சிக்கும் வகையில் கவிஞர் கண்ணதாசன் கூறியதாக குறிப்பிட்ட வரிகளையும் முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டினார்.
“கவிஞர் கண்ணதாசன் திமுகவைப் பத்தி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா, ‘பேசி பழகிய பொய்... வாங்கி பழகிய கை... தொட்டு பழகிய பை’ என்று சொன்னாரு. இதுதான் திமுக” என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் பேசினார்.
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் முன்வைத்தார். “திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் காலதாமதம் இருந்தது. ஆளும் கட்சி மீதான புகார்களில் காலதாமதம் இருந்தது. காலதாமதத்திற்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருந்தது” என்று பதிலுரையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பிய விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். “காவல்துறை மானிய கோரிக்கை மீதான உரையின்போது காவல்துறை பாடம் எடுக்க முயன்றார்கள். சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன்பாக கண்ணாடியில் உங்கள் ஆட்சியை ஒரு முறை பார்த்தால் நல்லது” என்று திமுகவை நோக்கி முதலமைச்சர் விஜய் கூறினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “சபையில் ஊழல் என்று சொன்னால் உடனடியாக திமுகவினர் எழுந்து நின்று விடுவார்கள். ஆனால் இதுவரை நாங்கள் ஊழல் செய்யவில்லை என சொல்லவே மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். டாஸ்மாக் அமைச்சரோடு இணைந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில தனிநபர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில் ரத்தீஷ் என்ற நபரின் பெயரும் அடிபடுகிறது. ரத்தீஷ் உத்தரவின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டனர். அவர் யாருக்கு நெருக்கமாக செயல்பட்டார்? நமது அரசு அமைந்த பிறகு அவர் துபாயில் சென்று ஓழிந்து விட்டார் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.
மேலும், கடந்த ஆட்சி காலத்தில் PARTY FUND மூலம் நேரடியாக பயன் பெற்றவர்கள் தொடர்பாகவும் அமலாக்கத் துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி முதலமைச்சர் விஜய் பேசினார். “கடந்த ஆட்சி காலத்தில் PARTY FUND மூலம் நேரடியாக பயன் பெற்றவர், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் என அமலாக்கத் துறையின் அறிக்கையில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
திமுகவினர் ஆதாரம் கேட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அந்த ஆதாரம் அவர்களது பக்கத்திலேயே இருப்பதாகவும் கூறினார். “திமுகவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஆதாரத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு, தேடுவார்கள். நான் PARTY FUND என்று சொன்னேன், ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் அவர்கள் பக்கத்தில் தான் இருக்கிறது. நாம் சொல்வது என்ன? EDயே PARTY FUND பற்றி அறிக்கையில் கூறியிருக்கிறது” என்று முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜயின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்கள் முயன்ற நிலையில், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி கீழே அமர்ந்துகொண்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
