MadrasHC: செந்தில் பாலாஜிக்கு 6வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29ம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 6வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு கடந்த விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சமயத்தில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29ம் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.