magalirurimaithogai: மகளிர் உரிமை திட்டம்! பிரத்யேக ஏடிஎம் கார்டுகள்.. முதலமைச்சர் இன்று இறுதி ஆலோசனை!

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத்தில் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி முக்கியமானதாக

Tamilnadu CM MK Stalin

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத்தில் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி முக்கியமானதாக கருதப்பட்டது. அதன்படி,  ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த சமயத்தில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, மகளிர் உரிமை தொகை திட்டம், கலைஞர்  உரிமைத்தொகை திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து,  கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர் உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.

இந்த திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர்.

எனவே, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் செப்.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. திட்டம் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, ரூ.1,000 பெற குடும்பத் தலைவிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டாக வழங்கப்படும் என்றும் இந்த கார்டு மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.