மனோபாலா மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என முதலமைச்சர் இரங்கல்.
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகருமான மனோபாலா (வயது 69) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தனது மனோபாலா வீட்டில் காலமானார். மனோ பாலா மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மனோபாலா மறைவையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் இரங்கல் செய்திக்குறிப்பில், மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
unknown node