பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேதனை – சபாநாயகர் அறிவுரை.!
டைடல் பார்க் தொடர்பான அதிமுக எம்ஏல்ஏ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேதனையுடன் பதிலளித்துள்ளார்.

சென்னை : 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடியது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய கூடலூர் அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,”எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தொழிற்பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே என் துறை வசம் டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழிற்துறை வசமே உள்ள அசாதாரண நிலை தொடர்கிறது.
நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும்” என்று வேதனை தெரிவித்தார். இதற்கு குறுக்கிட சபாநாயகர் அப்பாவு, ”துறைசார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேர்மறையான பதிலை வழங்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.