இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!
இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை விரைவில் துணை முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். ஆனால், அது எப்போது என்பது தான் தெரியவில்லை. இந்த பேச்சுக்கள் தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் ‘ஹாட் டாபிக்’-ஆக நிலவி வருகிறது.
அண்மையில் திமுக முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதற்கு அடுத்த நாள் (செப்டம்பர் 18) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், மூத்த திமுக அமைச்சர்கள் , மூத்த திமுக எம்பிக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்றைய தினமே துணை முதல்வர் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நேற்றும், இதே நிலைமை தான் நீடித்தது. இன்றைக்காவது துணை முதல்வர் பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்று திமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு வழங்குவதற்கு திமுக தொண்டர்கள், திமுக அமைச்சர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று செய்தியாளர்களிடம் துணை முதல்வர் பதவி பற்றிய தனது விருப்பத்தை கூறினார். அதில், ” வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் துணை முதல்வர் பற்றிய அறிவிப்பு வரும்.
அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்கும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். ” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். துணை முதல்வர் பற்றிய பேச்சுக்கும், அதற்கான அறிவிப்புகளுக்கும் இன்னும் தெளிவான கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.