‘ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள்’ என்ற திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்தார் அமைச்சர் உதயநிதி.
சட்டப்பேரவையில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ‘ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள்’ என்ற திட்டம் மூலம் வட்டார அளவில் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் ஒரு பொருளைச் சந்தைப்படுத்த ரூ.5 கோடி மதிப்பில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கத் திட்டம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திறன் பயிற்சி:
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சுழல் நிதி வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு பரிசளிக்கும்போது, மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையே பரிசளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிராமப்புற இளைஞர்கள் 45 ஆயிரம் பேருக்கு ரூ.145 கோடி செலவில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சமையல் செய்முறைக்கு ரூ.1 கோடியில் பயிற்சி அளிக்கப்படும்.
வானவில் பாலின வள மையம்:
ஊரக பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட சுய உதவி குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி தரப்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தில் வானவில் பாலின வள மையம் உருவாக்கப்படும். 37 வானவில் மையங்கள் அமைக்க நடப்பாண்டு ரூ.1.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், வளரிளம் பெண்கள் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதி அங்காடிகள்:
சுய உதவி குழுக்களின் பொருட்களை விற்பனை, காட்சிப்படுத்த ரூ.5 கோடியில் மதி அங்காடிகள் அமைக்கப்படும். 100 முக்கிய சுற்றுலா தலங்களில் மதி அங்காடிகள் அமைக்கப்படும். சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் குறுதொழில் நிறுவனங்கள் ரூ.50 கோடியில் வலுப்படுத்தப்படும்.. 1,000 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் புதிய தொழில் தொடங்க ரூ.50 கோடியில் திட்டம் என்றும் மகளிர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் சிறுதானிய விதை அலகுகள் ரூ.2 கோடியில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
உதயநிதி பேச்சு:
இதனிடையே பேரையில் பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டின் பெயர் தமிழ்நாடுதான் என சட்டப்பேரவையில் அறிவித்தபோது, அறிஞர் அண்ணாவின் மறு உருவமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தேன். எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில்தான், நான் சாப்பிடுகிறேன்; அதில் நானும் ஒரு பயனாளி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முந்தைய ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகள் செய்த பணிகளை திமுக அரசு 2 ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டது என்பதை நீங்கள் உணரலாம் என்றார்.