இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவின் ஜெயவர்தன் உள்ளிட்டோரின் வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
ராமச்சந்திரன் என்பவரும், அதிமுகவின் முன்னாள் எம்பி ஜெயவர்தனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன்படி, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை முடிந்து எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். இருந்தாலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தி பாலாஜி தொடருவார் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் அறிவித்திருந்தது. பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஆளுநர் நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆளுநர் தனது முடிவு திரும்ப பெற வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
