சென்னை :மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வருவதை கடுமையாக விமர்சித்துள்ளார். தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் படத்தை முடக்க முயற்சிப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி தனது அறிக்கையில், “ஜனநாயகன் படத்தை ஒன்றிய அரசு முடக்க முயற்சிப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல். தமிழர்களின் குரலை உங்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது மிஸ்டர் மோடி” என்று கூறியுள்ளார். இது திரைத்துறை மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தணிக்கை வாரியத்தின் தாமதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஏற்கனவே பல தரப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த கருத்து அக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து வந்த இந்த எதிர்ப்பு, படத்திற்கு ஆதரவு குரல்களை மேலும் அதிகரித்துள்ளது.’ஜனநாயகன்’ படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், சான்றிதழ் தாமதம் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தனி நீதிபதி U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட போதிலும், தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.ராகுல் காந்தியின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழர்களின் குரலை ஒடுக்க முடியாது என்ற அவரது அறிக்கை, ‘ஜனநாயகன்’ படத்தின் அரசியல் உள்ளடக்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்பு இந்தக் கருத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இத்தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
