முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!
கோயில் விழாக்களில் இது போன்ற பாகுபாடு 2,000 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது எனவும் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் வாக்குவாதத்திற்கு பிறகு வழிபட அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
இன்று (ஜூலை 7) – ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த விழாவில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இந்த சம்பவம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் பாகுபாடான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
இது பற்றி செல்வப்பெருந்தகை, பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கச் சென்றபோது, அறநிலையத்துறை அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தினர். ஆனால், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. இது பகிரங்கமான பாகுபாடு. சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு தான் அவர்கள் என்னை வழிபட அனுமதித்தனர். இந்த அணுகுமுறை முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் ஆகம விதிகளை காரணம் காட்டி, தீட்டு கடைபிடிப்பதாக கூறியதாகவும், இது தன்னை மனதளவில் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், “கோயில் விழாக்களில் இது போன்ற பாகுபாடு 2,000 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், சில அதிகாரிகள் இந்த கொள்கைகளை சரியாக பின்பற்றுவதில்லை. இந்து சமய அறநிலையத்துறை, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். எனக்கு நேர்ந்த இந்த அவமதிப்பு, சமூகநீதியை மீறுவதாக உள்ளது,” என்று குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம், கோயில் நிர்வாகத்தில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் வலியுறுத்தினார். மேலும், செல்வப்பெருந்தகையின் புகார், சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. X தளத்தில், பலரும் “பாஜகவின் தமிழிசைக்கு அனுமதி அளித்து, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுத்தது சமூகநீதியா?” என்று கேள்விகளை எழுப்ப தொடங்கி இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.