அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை
செயல் தலைவர் என்று சொல்கிறோம் மக்களை சென்று பாருங்கள் மக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அன்புமணியின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளித்த ராமதாஸ், தனது பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, மறைமுக எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பேச்சு, பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது மற்றும் கட்சியின் உட்கட்சி அரசியலை வெளிப்படுத்தியது.
ராமதாஸ், கூட்டத்தில் பேசுகையில், “அன்புமணி எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் இனிஷியலைப் போட்டுக்கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால், என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது,” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “இனிஷியலைப் போட்டுக்கொள்ளலாம், ஆனால் என்னுடைய பெயரை முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கருத்து, அன்புமணியின் சமீபத்திய பேச்சுக்கு எதிரான நேரடி பதிலடியாகக் கருதப்படுகிறது.
ராமதாஸ், அன்புமணியின் “வயது முதிர்வால் குழந்தை போல் மாறிவிட்டார்” என்ற கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், “ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். அந்த ஐந்து வயது குழந்தையான நான்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் அன்புமணியை தலைவராக்கியவன்,” என்று கூறி, தனது முடிவுகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டினார்.
மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில் “தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை,” என்று கூறி, தனது வார்த்தைகளுக்கு அன்புமணி கட்டுப்பட வேண்டும் என்று மறைமுகமாக எச்சரித்தார். “செயல் தலைவர் என்று சொல்கிறோம், மக்களைச் சென்று பாருங்கள், மக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,” என்று கூறினார். இது, அன்புமணியை மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றவும், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் வலியுறுத்தும் அறிவுரையாக அமைந்தது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் சூழலில், ஏற்கனவே பாமக உட்கட்சி விவகாரம் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஒரு வருத்தமாக இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025