என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – கோகுல்ராஜின் தாயார் உருக்கம்!

Default Image

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதில், சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கான தண்டனை குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, முதலாவது குற்றவாளியான யுவராஜ்-க்கு 3 ஆயுள் சிறை தண்டனை, சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் 2வது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள்  தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 5 பேருக்கு 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோகுராஜ் தாயார் சித்ரா, ஒரு ரூபாய் கூட வாங்காமல் எங்களுக்காக போராடி நீதி வாங்கி தந்த வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கு, விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கு எனது நன்றி, என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும் உருக்கமாக தெரிவித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்க போராடிய அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்றும் வன்கொடுமை கொலை செய்பவர்களுக்கு இந்த தண்டனை பாடமாக அமையும். கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென கோரினேன். விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கு தண்டனை வழங்க வேண்டும். யுவராஜிற்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும் எனவும் தாயார் சித்ரா கூறினார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்று கோகுல்ராஜின் சகோதரர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன், முதல் குற்றவாளி யுவராஜுக்கு எந்த பிணையும் கிடைக்காதவாறு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தீர்ப்பு கிடைத்துள்ளது.  கோகுல்ராஜ் திட்டமிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். முதலில் தற்கொலை வழக்காக கருதப்பட்ட நிலையில், உடற்கூராய்வுக்கு பின்பே படுகொலை என தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முதலில் இந்த வழக்கை திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இது தொடர்பாக விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்